வாகனத்தில் குடும்பம் இருக்க... அணு மின் நிலைய கோட்டைசுவர் வரை செல்கையில் இந்த போராட்டத்தில் நாமும் ஒரு அங்கம் என்ற நிதர்சனம் அந்த கணத்தில்...இந்தியா முதன்முறை கிரிக்கட் உலகக்கோப்பை வென்ற போதே எண்பதுகளில் தொடங்கிய எதிர்ப்பு போராட்டங்களின் கடைசி அத்தியாயம் தான் இந்த அமைதிப்போராட்டம். போராட்டத்தின் முதுகெலும்பாய் உள்ள பலமுறை பல ஊடகங்களில் ஏளனப்படுத்தப்பட்ட அந்த வீரத்தாய்களை சந்திக்க அடுத்து இடிந்தகரை நகரை நோக்கி போராட்ட ஸ்தலம் நோக்கி எங்கள் பயணம் தொடர்கிறது....
எப்போதும் இடிந்தகரை அந்த ஊரின் ஆண்மக்களது வீரத்திற்கு பேர்பெற்றது.ஆனால் இந்தப் போராட்டத்தின் முதுகெலும்பாய் பெரும்பாலும் அவ்வூரின் பெண்கள் தான் இருப்பதாய் கேள்விப்பட்டு அவர்களை சந்திக்க இருப்பதில் எங்கள் குடும்பத்திற்கு உற்சாகம் தொற்றிக்கொண்டது...அன்று மூன்றாம் கட்டபோராட்டத்தில் 67 வது நாள்...
தொடர் உண்ணாவிரதம் நடக்கும் ஆலய வளாகத்தை நெருங்கையில் உற்சாகத்தோடு சிறிது பதட்டமும் தொற்றிக்கொண்டது...நம்மை முதலில் அணுகியவர் நம்மை பற்றி தெரிந்தவுடன் நட்புடனும் பெருமிதத்துடனும் போராட்டம் மற்றும் உண்ணாவிரதம் குறித்து விளக்கத்தொடங்கினார்...
ஆலய வளாகத்தில் தரையில் தத்தம் வீடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட போர்வைகளின் மீது அமர்ந்திருந்த பெண்களைப் பார்க்கையில்...தலைக்கு மேல் வெறும் ஒலைக்கூரையை பார்க்கையில்...ஆலயத்துக்கு முன்பு ஆயிரக்கணக்கானோர் மணலில் அமர்ந்து உண்ணாவிரதம் இருப்பதை பார்க்கையில்... இன்று மதியின்றி கோடிக்கணக்கில் அந்நிய உதவியுடன் இவர்கள் போராட்டம் நடக்கிறது என்று வாய் கூசாமல் புளுகும் மன்மோகன்...சிதம்பரம்...நாராயணசாமி கும்பலை மனிதர்களாய் நினைக்க கூட மனம் கொள்ளவில்லை...
அசௌகரியமாய் நின்று கொண்டிருந்த என் மகளை தங்கள் பிள்ளை போல தங்கள் வீட்டுக்குள் அழைத்து சென்ற சில தாய்மார்களுடன் பேச்சு கொடுத்தோம்.விருந்தோம்பலுடன் வீரமும் கூடவே அவர்களுக்கு பிறந்தது என்பது உடனே தெளிவாயிற்று...அமைச்சர் நாராயணசாமி ஊருக்குள் வர ஒரு காவலர் கூட துணை வர பயந்ததை பெருமிதத்தோடு சொல்கையில் அவர்கள் கண்களில் வீரம் மின்னியது.காவலர்கள் நுழைய பயப்படும் ஊருக்குள் போராட்டக்குழு பாதுகாப்போடு ஒருமுறை வந்த அமைச்சர்அந்த பக்கம் உயிருக்கு பயந்து இதுவரை தலைகாட்டாததை சொல்லி சிரிக்கின்றனர் அந்த வீரத்தாய்கள்.
ஊடகங்கள் எப்போதும் ஏளனப்படுத்தும் இந்த வீரத்தாய்களின் விருந்தோம்பல்...வீரம்...கூடவே ஏகப்பட்ட நகைச்சுவை உணர்வு கண்டு இருக்கையில் வெளிப்படுகிறது அவர்களது இன்னொரு முகமும்...நம்மை அவர்களது வீட்டுக்கு பின்னே அழைத்து செல்கிறார்கள்...முன்னூறு அடியில் கடல் கரை...நிறைய கட்டுமரங்கள்...அன்று கடலுக்கு சென்று திரும்பிய மீனவர் கூட்டம்...வலது பக்கம் திரும்பினால்...நம்பவே முடியவில்லை மீனவர் தலைகளுக்கு சற்றே மேலே இவர்கள் எமன் என்று சரியாக நினைக்கும் அணு உலை...இவ்வளவு அருகாமை என்று நான் கனவிலும் நினைக்கவில்லை...கடல்கரையை அடைத்து பாறைகளால் மேடை..அமைத்து சூடான நீர் இவர்கள் கொல்லைப்புறத்தில்.இப்போது புரிகிறது ஏன் இந்த போராட்டம் என்று...
தானுண்டு தங்கள் வேலை உண்டு என்று அமைதியாய் போய்க்கொண்டிருந்த இவர்கள் வாழ்வில் எங்கேயோ சேரவேண்டிய எமன் இந்த உலை வடிவில் பக்கத்து வீட்டுக்காரனாய் வந்ததில் போனது இவர்களது நிம்மதி..ஏற்கனவே இந்த பகுதியில் நான்கு முறை வந்த நில நடுக்கங்களையும்..வெறும் சிமெண்ட் மற்றும் கல் மேடை மீது கடல் மணலில் இருக்கும் உலையையும்...அணு கழிவு அங்கேயே புதைக்கப்படுவதையும்...சூடான நீர் எப்படி அவர்களது வாழ்வாதாரத்தை எப்படி பாதிக்கிறது என்பதையும்...பட்டியல் இட்டு சொல்லி...கடைசியில் சொன்னதை கேட்டு பிளந்த வாய் மூட நிறைய நேரம் ஆனது...அந்த அணு விஞ்சானி (?) க்கும் மெத்த படித்த மேதாவிகளுக்கும் தோன்றாத ஒன்று...
அது பாதுகாப்பானது...இது இத்தனை விகிதம் பாதுகாப்பானது...இது அதுவரை தாக்குப்பிடிக்கும்...இப்படி இருப்பதால் பாதுகாப்பானது என்று எல்லாரும் ஒன்று + ஒன்று = இரண்டு என்று சாதாரணமாய் சொல்கிறார்கள்.... அது கணக்கிற்கும் அறிவியலுக்கும் சரி...நிஜ வாழ்வில்...?
ஆம்...
தாக்குப்பிடிக்க கூடிய பூகம்பம் + சரியான அளவு சுனாமி + எதிர்பார்க்கிற மின் வெட்டு + உள்புகும் கடல் நீர் + பாதுகாப்பாய் சேமித்து வைக்கப்பட்ட அணு கழிவு + பத்து மைல் அருகாமையில் ஒரு லட்சம் மக்கள் + அவர்களை வெளியேற்ற சரியான திட்டமும்(?) மீட்பு பணியாட்களும்(?) + மெல்ல கசியும் கதிர்வீச்சு = பேரழிவு
(தொடரும்)
